தமிழ் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி வடிவம்:

- செய்முறை:
-   நோக்கம்:
- பயிற்சியளிப்பு:
- நிகழ்ச்சி நடத்தும் விதிமுறைகள்:

வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குபெறப் பதிவுசெய்தவர்களைக் கொண்டு இரண்டு அணிகள் அமைத்து, அணிக்கு ஒரு தலைவரும், அவருக்கு உதவியாக ஒரு துணைத்தலைவரும் தேர்வுசெய்யப்படுவார்கள். அவ்விரு அணிகளுக்கும் பொருத்தமான பெயர்கள் சூட்டப்படும். எடுத்துக்காட்டாக‌ 2022ஆம் ஆண்டு நிகழ்ச்சியில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அணி, வீரமங்கை வேலுநாச்சியார் அணி எனப் பெயர்க‌ள் சூட்டப்பெற்றன. நாட்டு நடப்பு என்ற பாடப்பகுதியில், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுத்தல், இந்தித் திணிப்பு வன்முறைகளை வெளிப்படுத்தல், தமிழினத்திற்கு எதிரான மற்றவர்களின் செயற்பாடுகளைத் தோலுரித்துக் காட்டல் எனும் வகைகளில் வினாக்களை 

வடிவமைத்துத் தமிழ்மக்களுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வூட்டியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் வினா மற்றும் விடைகளில், ஒலித்தட இசை, சில வினாக்களில் பொருத்தமான காணொளிக் காட்சிகள் ஆகியவை இணைக்கப்பட்டு இவ் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியானது மக்களின் சுவையார்வத்தைக் கூட்டும் வகையில் அமைக்கப்படுகின்றது.

செய்முறை: 

- ஒவ்வோர் ஆண்டும் உகந்த பாடத்திட்டம் வகுத்து, தகுந்த முறையில் பயிற்சியளிப்பது. 

- இரண்டு அணிகள் அமைத்து, பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து இலக்கியம் படிக்க வைப்பது.

- குழுவாக இணைந்து பணியாற்றும் ஒழுக்கத்தைக் கற்பிப்பது.

பாடத் திட்டங்கள்:

- படிக்க வேண்டிய பாடங்களுக்குத் தேவையான ஆவணங்கள் பங்கேற்பாளர்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்படும்.

- முந்தைய ஆண்டுகளின் வினாடி வினா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மாதிரிகளும் கொடுக்கப்படும்.

நோக்கம்: 

- தமிழ் இலக்கியங்களை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்வது.

- இலக்கியத்திற்குச் சுவையூட்டும் வகையில் அதனைப் பல்லூடக நிகழ்வாக்கி மக்களைக் கவர்ந்து, தமிழ் இலக்கியத்தின்மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்குவது.

- அடிப்படைத் தமிழிலக்கணத்தையும், உயர்நிலைப்பள்ளிப் பாடப்பகுதிகளிருந்து சில வினாக்களையும் புதுப்புது வடிவங்களில் கேட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புத்துணர்வூட்டுவது.

- பார்வையாளர்களும் பயன்பெறும் பொருட்டுப் பெரும்பாலும் வினாக்களைத் தெளிவாகவும் எளிதாகவும் புரியும்படி அமைத்தல்.

- இளைஞர்களிடம் தமிழ்மொழி மற்றும் தமிழிலக்கியத் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதே இந்நிகழ்வின் முதன்மை நோக்கம்; வெற்றி தோல்வி நோக்கமன்று!

பயிற்சியளிப்பு:

- ஒவ்வோர் அணிக்கும் தனித்தனியாகச் சுமார் மூன்று மாதங்களுக்குப் பயிற்சியாளர்க‌ள் பயிற்சியளிப்பார்க‌ள். 
- அணித்தலைவர்கள் தங்கள் அணி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பாடங்களைப் பிரித்துக்கொடுத்து மேற்பார்வை செய்துவருவார்கள்.
- பயிற்சிக்கான சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்படும். பாடப்பகுதிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். 
- ஒவ்வொரு வாரமும் தொலைபேசி உரையாடல் மூலம் பயிற்சி (இணையவழி) அளிக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள ஆவனசெய்யப்படும்.

நிகழ்ச்சி நடத்தும் விதிமுறைகள்:

- நிகழ்ச்சியின் முதல்திரையில் வினா வரும். குறிப்பிட்ட நேரம்
முடிந்தவுடன் விடை அடுத்த (இரண்டாம்) திரையில் வரும். 
- குறிப்பிட்ட அணியின் விடை தவறாக இருந்தாலோ நேரம் முடிந்து விட்டாலோ, அந்த வினா அடுத்த அணிக்குக் கேட்கப்படமாட்டாது.
- விடையளிக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு. 
- நடுவர்கள் சரி/தவறு பார்த்து, மதிப்பெண்களைக் கணக்கிடுவார்கள். 
- நிகழ்ச்சியின்போது கைப்பேசி, மடிக்கணினி, நூல்கள், ஆவணங்கள் முதலியன‌ பயன்படுத்த அனுமதியில்லை.

அணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீருடைகளை அணிந்து மேடையில் இரண்டு குழுக்களாக‌ அமர்ந்திருப்பார்கள்.
இரண்டு நடத்துநர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை மேடையில் நடத்துவார்கள். ஒருமணி நேர நிகழ்ச்சியில், ஒவ்வோர் அணிக்கும் 25 வினாக்கள். நிகழ்ச்சியின் முடிவில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டு, எந்த அணி அதிக மதிப்பெண்கள் பெற்றது என்பதும் அறிவிக்கப்படும்.  தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு, புதிய‌ நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கும் இந்நிகழ்ச்சி வழிவகுக்கின்றது. பேரவைக்கு எவ்விதப் பொருட்செலவும் இல்லாமல், மிகுதியான மக்கள் விருப்பத்தோடு பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது இதன் தனிச் சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்